குண்டாக இருந்தாலும் நன்றாக சாப்பிடலாம்

0
119
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

இன்றைய தலைமுறை இருந்த இடத்திலிருந்தே கையில் உள்ள ஸ்மார்ட் போன் மூலம் சகல வேலைகளையும் செய்யும் 4G தலைமுறை. உடல் உழைப்பு குறையும்போது உணவும் குறையவேண்டும் என்றால் ஏன்? என்று புருவம் தூக்குவார்கள். அப்புறம் தன் உடலை தானே தூக்க முடியாமல் திணறுவார்கள். குண்டானவர்களை, கள்ளம் கபடமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், ச்சப்பி, புஸ் புஸ், என்று நாம் செல்லமாக கொஞ்சினாலும், அதன் கஷ்ட நஷ்டங்கள் சம்மந்தபட்டவருக்கே தெரியும். சக நண்பர்களின் கிண்டல், பொது இடங்களில் கேலி பார்வை என்று ஆண்களுக்கே கஷ்டங்கள் நிறைய இருக்கும்போது, பெண் என்றால் கேட்கவே வேண்டாம். ஜோதிகாவையும், அனுஷ்காவையும் குண்டானாலும் அழகு என்று ரசிப்பவர்கள், வீட்டில் உள்ள அக்காவோ தங்கையோ குண்டாக இருந்தால் அதை கேலியாகத்தான் பார்க்கிறார்கள்.

சரி நான் குண்டாகத்தான் இருக்கிறேன் ஒல்லியாக வேண்டாம், எல்லோரையும் போல் கொஞ்சம் எடை குறைவாக இருந்தால் நன்றாகத்தான் இருக்கும், அதற்கு என்ன பண்ணலாம், செய்ய முடிந்ததாக சொல்லுங்கள் என்றீர்கள்தானே! இதோ உங்களுக்குதான் இது. தொடர்ந்து படியுங்கள்.

பட்டினி கிடக்கலாமா :

முதலில் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளூங்கள், உணவு கட்டுபாடு என்றால் பட்டி கிடப்பது அல்ல. உங்களுக்கு பிடித்த உணவை வீட்டிலோ அல்லது கல்யாண விருந்திலோ பார்க்கும்போது சாப்பிட ஆசையாக இருந்தால் சாப்பிடுங்கள். ஆனால் சிறிதளவு ருசிக்காக மட்டும் அளவாக சாப்பிடுங்கள் . சிலர், உடல் இளைக்கவேண்டும், டையட்டில் இருக்கிறேன் என்று கட்டுப்படுத்திக்கொண்டு கஷ்டப்படுவார்கள். பின் திடீரென்று ஒருநாள் அவர்களையும் மீறி அதே உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுவிட்டு விளைவுகளால் அவதிப்படுவார்கள்.

இன்னும் சிலர் மதிய உணவை எடுத்துக்கொள்ளாமல், அதற்கு பதில் மாலைவேலையில், சிற்றுண்டி என்ற பெயரில், வடை, போண்டா, சமொசா என்று எண்ணை பொருட்களை சாப்பிடுவார்கள். கூடவே தேநீர் அருந்தும் பழக்கமும் நிறைய பேருக்கு இருக்கும். இது எந்த விதத்திலும் உங்கள் உணவு கட்டுப்பாட்டில் சேராது. மதிய உணவை தவிர்ப்பது, அல்சர் போன்ற பின்விளைவுகளுக்கு வழிவகுக்கலாம். மேலும், வீட்டிற்கு சென்றதும் மதியம் சாப்பிடவில்லை என்ற நினைப்பில் இரவு உணவை வழக்கத்திற்கு அதிகமாக சாப்பிடுவார்கள். இதுவும் அஜீரம் தூக்கமின்மை போன்ற பிரச்சனை ஏற்படுத்தும். எனவே அளவாக சாப்பிடுவதுதான் கட்டுபாடே ஒழிய முற்றிலுமாக தவிர்ப்பது அல்ல.

இண்ட்ரவல் சாப்பாடு :

நமது அன்றாட வாழ்வில் உடலுக்கு தேவையான மாவுசத்து, கொழுப்பு சத்து, மற்றும் புரோட்டீன் இவை மூன்றும், பெரு நுண்ணூட்ட சத்துக்கள் (மேக்ரோ நியூட்ரியன்ஸ்) என்று அழைக்கப்படுகின்றன. காரணம் நமது உடல் இயக்கத்திற்கு இவை அனைத்தும் அதிக அளவில் தேவைப்படுகின்றன. உணவு கட்டுபாடு என்று இவைகளை முற்றிலும் தவிர்த்தால், அது உங்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

டயட்டில் இருக்கும் நபர்கள், உடல் எடை குறைந்தால் உடனே தங்கள் முயற்சி பலனளித்ததாக சந்தோஷப்படுவார்கள், உடல் எடை குறைவது மட்டும் ஆரோக்கியம் அல்ல, அது உங்கள் உடலுக்கு தேவையான மேற்சொன்ன மூன்று அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்காமல் போவதின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். சராசரியாக ஒரு நபருக்கு ஒருநாளைக்கு 1,200 கலோரிகள் தேவை. முறையான உணவு பழக்கத்தினால் இந்த அளவை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி , மொத்தமாக சாப்பிடாமல், 2 மணிநேர்த்திற்கு ஒருமுறை என்று கொஞ்ச கொஞ்சமாக சாப்பிடுவர்கள் இருக்கிறார்கள். இது நல்ல யோசனைதான். ஆனால் 2 மணிநேரம் ஆகிவிட்டது என்பதற்காக கடனே என்று நீங்கள் எதையாவது சாப்பிட தேவையில்லை. பசி இருந்தால் மட்டுமே சாப்பிட்டால் போதும்.

நன்றாக பசி எடுத்து பின் சாப்பிட அமரவேண்டும், பசி முழுவதும் அடங்குவதற்குள், கொஞ்சம் காலி வயிருடனே எழுந்துகொள்ளவேண்டும் இது நம் முன்னோர்கள் சொல்லிவைத்தது. அது எவ்வளவு பலனுள்ளது என்று நீங்கள் கடைபிடித்து பார்த்தால் புரியும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்