சமாளிக்க தெரிந்தால் வெயிலும் சுகமே

0
107
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

காலத்தின் முகங்களில் மழைக்காலம், குளிர்காலம், வசந்தகாலம் போல வெயில் காலமும் ஒரு முகம் தான். பாடாய் படுத்தும் வெப்பம், வீட்டுக்குள்ளே இருந்தாலும் ஆறாய் ஓடும் வியர்வை, வெளியே சென்றால் உடலின் எல்லா நீரையும் தலைவழியே ஸ்ட்ரா போட்டு உரியும் சூரியன், எந்த ஆடையை போட்டாலும் இறுக்கமாகவே நெருக்கும் உணர்வு போன்று வெயில் காலத்திற்கு என்று பல குணங்கள் இருக்கிறது. மழைக்காலம் போலவும் வசந்தகாலம் போலவும் இதையும் நாம் ரசிக்கக் கற்றுக்கொண்டால் சுகமான இம்சையாகவே வேனிற்காலம் தோன்றும். எந்த ஒரு குழந்தையும் மாணவப் பருவம் முடியும் வரையில் கோடைக்காலத்தை வெறுப்பதில்லை, மாறாக விரும்பவே செய்கிறார்கள். ஏனென்றால் வெயிலை தாண்டி விடுமுறையை அவர்கள் ரசிப்பதால் தான். அதைப்போலவே நாமும் புத்திசாலித்தனமாக வெயிலை சமாளிக்கவும், வெயிலுக்கே உரித்தான சில நன்மைகளை பாராட்டவும் கற்றுக் கொண்டால், வெயில்காலத்தை நாம் எல்லோருமே வரவேற்க கற்றுக்கொள்வோம். வெயில் காலத்தில் அப்படி என்ன நன்மைகள் இருக்கு என்கிறீர்களா?

மிக முக்கியமாக, கொசுத்தொல்லை இருக்காது அல்லது குறைவாய் இருக்கும். தோய்த்த துணிகள், தலைக்கு குளித்தால் கூந்தல் சீக்கிரமாக ஆறிவிடும், வீடு வெளிச்சமாகவும், ஈரம் பூஞ்சை போன்றவை இல்லாமல் பளிச்சென்று இருக்கும். பழங்கள், பழரசங்கள், குளிர்பானங்கள் ஐஸ்க்ரீம் போன்றவைகளை தாராளமாக சாப்பிடலாம், தர்பூசனி, கிர்னி போன்ற சுவையான பழங்களை அதிகமாக சுவைக்கலாம். உல்லாச பயணங்கள் மேற்கொள்ளலாம். இப்படி வெயில்காலத்தை ரசிக்க பல காரணங்கள் இருக்கின்றன. இதெல்லாம் சரிங்க வெயிலின் வெப்பத்தை சமாளிக்க வழி சொல்லுங்க என்கிறீர்களா? இதோ பின்வருமாறு பார்க்கவும்.

உணவு முறையில் :

  • காலையில் ஏதாவது ஒரு இனிப்பான பழம் அல்லது பழரசத்துடன் ஆரம்பியுங்கள். பிடிக்கும் என்றால் பழைய சாதத்தில் உள்ள நீராகாரத்தை குடிக்கலாம்.வெயில் காலத்தில் அதிகமாக விளையும் எந்த பழத்தையும் தாராளமாக நாள் முழுதும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • குறைவான அளவில் உணவை அவ்வப்போது எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதிக புரத உணவை தவிர்ப்பது நல்லது. புரத உணவை ஜீரணிக்க உடல், சூட்டை அதிகமாய் வெளிப்படுத்தும். இதனால் உடல் சூடு அதிகரிக்கும். எனவே புரத உணவை குறைவாக சாப்பிடுவது நல்லது.
  • பச்சை காய்கறிகளால் செய்த சாலட்டை நிறைய சாப்பிடலாம். வெள்ளிரிக்காய், வெங்காயம் தக்காளி முள்ளங்கி சுரக்காய் கோஸ் போன்றவைகளை சாலட்டாக சாப்பிடுவது நல்லது. இந்த காய்கறிகளில் நிறைய நீர் இருப்பதால் ரத்தத்தை நீர்க்கச்செய்து உடல் சூட்டை தணிக்கிறது.
  • அதிக காபி, டீ மற்றும் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். இதனால் சிறுநீரின் அளவு அதிகரித்து உடலின் உப்புச்சத்துக்கள் துரிதமாய் குறைந்துவிடும்.
  • க்ரீன் டீ, பச்சை வெங்காயம் போன்றவைகளில் ஆண்டி ஆக்சிடெண்ட் நிறைய இருப்பதால் அது சூரிய ஒளியினால் ஏற்படும் செல்களின் பாதிப்பை போக்குகிறது.
  • குறைந்த அளவில் மிளகு, இஞ்சி போன்ற காரமான பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது உடலின் வெப்பத்தை வியர்வையின் மூலம் வெளியேற்றி உடல் சூட்டை குறைக்கிறது.
  • உடலின் திரவ அளவை கூட்ட வேண்டும்.இதற்கு சுத்தமான தண்ணீரைத்தவிர சிறந்தது வேறொன்றுமில்லை. தாகத்தை புறக்கணிக்காமல் நிறைய தண்ணீரை அவ்வப்போது குடிக்க வேண்டும். சிறிதளவு எலுமிச்சை சாறும் தேனும் கலந்து குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.
  • அசைவம் சாப்பிடுபவராக இருந்தால் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவைகளை தவிர்க்கவும், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சியை குறைவாக சாப்பிடவும், மீன் உணவுகளை தேவைக்கேற்பவும் சாப்பிடுவது நல்லது.
  • அதிக குளிர்ச்சியுள்ள பானங்களை தவிர்ப்பதும் நல்லது. இது வியர்வை வெளியாவது, ஜீரணம் போன்ற செயல்பாடுகளை பாதிக்கும்.

உடலை பாதுகாக்க :

  • தளர்த்தியான, முழுக்கை கொண்ட பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வெயிலிலிருந்து உடலை பாதுகாக்கவும், வியர்வையை ஆவியாக்கவும் இவ்வகை ஆடை உதவுகிறது. இறுக்கமான உடைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
  • கண்களை பாதுகாக்க குளிர்கண்ணாடி அணிந்து வெளியில் செல்வதை பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். சூரிய ஒளியின் யுவி கதிர்கள் கண்களின் விழிப் படலத்தையும் கண்களை சுற்றியுள்ள பூந்தசைகளையும் பாதிக்கிறது. எனவே 100% யுவி பாதுகாப்பு உள்ள குளிர்கண்ணாடியை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
  • வெயிலில் செல்ல நேர்ந்தால் எஸ்பிஎஃப் (சன் ப்ரோடெக்‌ஷன் ஃபார்முளா) கொண்ட, அதாவது SPF 15, SPF30 மற்றும் SPF 40 கொண்ட க்ரீம்களை கை, கழுத்து மற்றும் முகத்தில் தாராளமாக தடவிக்கொண்டு செல்வது நல்லது.
  • அதிக சூடு இருந்து, உடலில் எரிச்சல் தோன்றினால் குளிர்ந்த நீர் கொண்ட பக்கெட்டில் கால்களை வைத்திருப்பது சுகமாக இருக்கும்.

வீட்டை பாதுகாக்க :

  • காலையில் வெயில் ஏறும்முன் வீட்டின் கதவு ஜன்னல்களை மூடி திரை சீலைகளையும் மூடி வைப்பது, வீட்டிற்குள் சூரிய வெப்பம் ஊடுருவதை தடுக்கும். அதேபோல் மாலை ஐந்து மணிக்குமேல் எல்லா ஜன்னல்களையும் திரைச்சீலைகளையும் திறந்து வைப்பது, வெளியிலிருந்துகுளிர்ந்த காற்று உள்ளே வர உதவும். மேலும் வீட்டிற்குள் காற்றோட்டத்தையும் அதிகரிக்க உதவும்.
  • வீட்டின் ஜன்னல்களில் ஈரத்துணியை கட்டி வைப்பது, வீட்டுக்கூரையில் தென்னங்கீற்றுகளை போட்டு தண்ணீர் தெளித்து வைப்பது, மொட்டை மாடியில் மெல்லிய வலையால் ஆன கூரையை போட்டு வெயிலின் சூட்டை குறைப்பது போன்றவைகளை கடைபிடித்தால் வீட்டின் உள்ளே சூடு இறங்குவது குறையும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்