தென்னாப்பிரிக்காவில் SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின் பட்டயமளிப்பு விழா

0

தென்னாப்பிரிக்காவில் SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின் ‘அயலகத் தமிழாசிரியர்’ படிப்பின் பட்டயமளிப்பு விழா

இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றான திரு. இராமசாமி நினைவுப் (SRM) பல்கலைக்கழகம், பொறியியல், மேலாண்மை, மருத்துவம், கலையியல், மானுடவியல், கல்வியியல் போன்ற துறைகளில் கல்வியை வழங்கிவருகின்றது. மேலும், தமிழ்மொழியின் தொன்மை, வரலாறு, பண்பாடு முதலியவற்றை உலகிற்குப் பரப்பவேண்டும் எனும் பெருநோக்கில், தமிழ்ப்பேராயம் (Thamizh Academy) என்னும் அமைப்பு 4.2.2011 அன்று SRM பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் முனைவர் தா.இரா. பாரிவேந்தர் அவர்களின் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்டது.

     தமிழரின் வாழ்வியல் சடங்குகளையும் தமிழ் வழிபாட்டையும் முன்னிருத்த அர்ச்சகர்களை உருவாக்கும் ‘தமிழ் அருட்சுனைஞர்’ பட்டயப் படிப்பினை வழங்குதல், மனத்தையும் உடலையும் வளப்படுத்த உதவும் ‘யோகமும் மனித மாண்பும்’ எனும் பட்டயப் படிப்பினை வழங்குதல் தமிழில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர்களை உருவாக்க இணையவழித் தமிழ்க் கல்வி வழங்குதல், மாணவர் தமிழ் மன்றங்களை ஒருங்கிணைத்தல், கணினியின் அடிப்படையையும் பயன்பாட்டையும் பொதுமக்கள் பயிற்சிபெற்று, கணினியில் தமிழைப் பபயன்படுத்துவதற்காக, ‘கணினித்தமிழ்’ச் சான்றிதழ்ப் பயிற்சி வழங்குதல், கல்வியாளர்கள் தமிழ் மென்பொருள் உருவாக்கத்தைத் தெரிந்துகொள்ள, ‘தமிழ்க் கணினிமொழியியல்’ குறித்த பயிலரங்கு, கருத்தரங்கு நடத்துதல், தமிழ் மென்பொருள் உருவாக்குதல், தமிழ் மென்பொருள் உருவாக்குவோரை ஊக்குவித்தல், தொல்காப்பியம் பற்றிய குறுநூல்கள் வெளியிடுதல், அரிய தமிழ்நூல்களைப் பதிப்பித்தல், தமிழின் சிறப்புகளை உலகிற்கு உணர்த்த மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடுதல், தலைசிறந்த ஆய்வுகளை வெளிக்கொணர, தமிழ்ப்பேராயம் எனும் காலண்டு ஆய்விதழை வெளியிடுதல் போன்ற தமிழின் மரபுச் செல்வங்களை இளைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் பணியோடு இந்திய அரசின் சாகித்திய அகாதமி இந்திய மொழிகளின் படைப்புகளுக்கு விருதுகள் வழங்குவதைப் போன்று தமிழ்நாட்டில், தமிழ்மொழிக்காகத் தமிழ்ப் படைப்புகளுக்கும் அறிஞர்களுக்கும் விருதுகள் வழங்குதல் போன்றவற்றைத் தமிழ்ப்பேராயம் செய்துவருகிறது. இவற்றைச் செயல்படுத்துதற்காக, தமிழ்க் கல்வித்துறை, தமிழ்ச் சமயக் கல்வித்துறை, கணினித்தமிழ்க் கல்வித்துறை, பதிப்புத்துறை, விருதுவழங்கும் துறை எனும் ஐந்து துறைகளின்வழி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

     வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் குறைந்தபட்சம் தமிழைப் பேசவும் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். வேற்றுமொழி பேசும் சூழல் உள்ள நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களது அலுவலகப் பணி முடிந்த பிறகும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் தனிப்பட்ட வீடுகளிலும் விடுமுறை நாட்களில் அரசுப் பள்ளிகளை வாடகைக்கு எடுத்து ஆங்காங்கே தமிழ்ப் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். இத்தகைய தமிழ்ப் பள்ளிகளின்வழி தமிழ்க்கல்வியோடு, நம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கலைகளையும் எடுத்துச்செல்லவேண்டும் என்ற நோக்கில் நம் பழந்தமிழர் கலைகளையும் இசை, நாட்டியம், தமிழர் விழாக்கள் போன்றவற்றையும் இதன்வழி குழந்தைகளுக்கு வழங்கிவருகின்றனர்.

     இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழர்கள் மிகுதியாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு ஆட்சிமொழியாகத் தமிழ் இருப்பதால் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தமிழ்க் கல்விபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆனால் தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், ரீயூனியன் போன்ற நாடுகளில் உள்ளோர் தமிழகத்தோடு நெருங்கிய தொடர்பின்றி வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய நாடுகளில் உள்ள தமிழர்கள் மூன்று நான்கு தலைமுறைகளைக் கடந்து அங்கு வசித்துவருவதால் அவர்களுக்குத் தமிழ் வழக்குமொழியாகப் பயன்பாட்டில் இருந்துவருவது குறைந்துவருகிறது. இதனால் மேற்குறிப்பிட்டுள்ளபடி தமிழ்க் கல்வி பெறுவதற்குச் சூழல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

     இதனைக் கருத்தில்கொண்டு தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், ரீயூனியன், பிஜி போன்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் தமிழ்க்கல்வி பெறுவதற்குரிய வாய்பினை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதனை முதன்மை நோக்கமாகக் கொண்டும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, அரேபிய நாடுகளான துபாய், சௌதிஅரேபியா மற்றும் ஐரோப்பியநாடுகளான சுவிற்சர்லாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, டென்மார்க், மியான்மார், நார்வே போன்ற பிற நாடுகளில் வாழும் தமிழர்களும் பயன்பெறவேண்டும் என்ற நோக்கிலும் இந்த அயலகத் தமிழாசிரியர் என்னும் ஆசிரியர் பயிற்சிப் பட்டயப்படிப்பு SRM பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது.

     புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் மருத்துவம், பொறியியல், கணினியியல் போன்ற படிப்புகளில் பட்டம் பெற்றவர்களாக உள்ளனர். இவர்களுக்குத் தமிழைப் எழுத, பேச, படிக்கத் தெரியுமே தவிர தமிழைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதற்கான கல்வியறிவும் பயிற்சியும் கல்வித் தகுதியும் இல்லாமல் இருந்துவந்தது.

     இந்தக் குறையைப் போக்கும் வகையில் தமிழ்ப்பேராயம் வெளிநாடுகளில் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழைச் சொல்லிக்கொடுப்பதற்குப் பயிற்சியும் கல்வித்தகுதியும் உள்ள ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் அயலகத் தமிழாசிரியர்(Diaspora Tamil Teacher) என்னும் ஓராண்டு ஆசிரியர் பயிற்சிப் பட்டயப் படிப்பினைத் தொடங்கியது.

     இந்தப் படிப்பினைப் படிப்பதன் வாயிலாக உலகநாடுகளில் வாழும் தமிழர்கள் முறையான ஆசிரியப் பயிற்சியைப் பெற்றவர்களாகவும் தகுதிக்காகப் பட்டயத்தைப் பெற்றவர்களாவும் உருவாகின்றனர். இது அவரவர் வசிக்கும் நாடுகளில் உள்ள பள்ளிகளில் தமிழாசிரியர் பணிபெறுவதற்கு வாய்ப்பாக அமைகின்றது. மேலும், குழந்தைகளுக்குத் தமிழை எவ்வாறு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற அறிவினைப் பெறுவதால் ஆர்வமுள்ளோர் தனிநிலையிலும் தமிழ்ப் பள்ளிகளை நடத்துவதற்கு இது வாய்ப்பாக அமைகின்றது.

     இதனடிப்படையில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்துடன்(International Movement for Tamil Culture – IMTC) இணைந்து 2014 ஜனவரி முதல் தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் 2014 ஜூலை முதல் ஆஸ்திரேலியத் தமிழ்க் கலாசாலையுடன்(Australian Tamil Academy-ATA) இணைந்து ஆஸ்திரேலியாவிற்கும் இந்தப் படிப்பு நடத்தப்பட்டுவந்தது.

     இந்தப் படிப்பில் தென்னாப்பிரிக்காவில் இருந்து 63 மாணவர்கள் பயின்றுவந்தனர். இவர்களில் 44 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான பட்டயமளிப்பு விழா(Graduation Day) 04.04.2015, சனிக்கிழமையன்று தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் மியர்பேங்க் தமிழ்ப் பள்ளி அரங்கத்தில் (MTSS) காலை 10 மணியளவில் நடைபெற்றது.

     இந்தப் பட்டயமளிப்பு விழாவை SRM பல்கலைக்கழகத்தின் வேந்தரும் தமிழ்ப்பேராயத்தின் புரலவலருமான மாண்பமை முனைவர் தா.இரா. பாரிவேந்தர் அவர்கள் தலைமையேற்று நடத்தி மாணவர்களுக்குப் பட்டயங்களை வழங்கி, பட்டயமளிப்பு விழாப் பேருரை வழங்கினார்கள்.

     இவ்விழாவில் SRM பல்கலைக்கழகப் பதிவாளரும் தமிழ்ப்பேராயத்தின் தலைவருமான முனைவர் நா. சேதுராமன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். இந்தப் படிப்பினைத் தென்னாப்பிரிக்காவில் எடுத்து நடத்திய உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் திரு. மிக்கி செட்டி அவர்கள் அறிமுகவுரை வழங்கினார்கள்.

     தென்னாப்பிரிக்காவின் இந்தியத் தூதரகர்(Indian Consul General) மாண்பமை இரா. இரகுநாதன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். இவர் தமிழர் என்பதும் விழாவில் தமிழில் பேசினார் என்பதும் சிறப்பிற்குரியதாகும். குவாசூலு நடால் மாநிலத்தின் (டர்பன்) மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு ரவி பிள்ளை அவர்களும் ஈகவேனி மாநகராட்சியின் பேச்சாளர் மாண்புமிகு லோகி நாயுடு அவர்களும்    SRM பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் மு. பொன்னவைக்கோ அவர்களும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அனைத்துலகச் சிறப்புத் தலைவர் கனடாவைச் சேர்ந்த வீ.சு. துரைராசா அவர்களும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதி ராஜா அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

     இவ்விழாவில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், ஜெர்மனியைச் சேர்ந்த IMTC அமைப்பின் செயலாளர் திரு. துரை. கணேசலிங்கம், மலேசியாவைச் சேர்ந்த IMTC அமைப்பின் துணைத் தலைவர் திரு. ப.கு. சண்முகம், ஆஸ்திரேலியத் தமிழ்க் கலாசாலையின் தலைவர் திரு. கா. சுகுமாரன், சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. க. பார்த்திபன், தென்னாப்பிரிக்காவின் மேஜர் ஜெனரல் பாலா நாயுடு, MTSS பள்ளியின் செயற்குழு உறுப்பினர் திரு. மோகன் நடேசன், தென்னாப்பிரிக்க இந்து மகா சபையின் தலைவர் திரு. அஸ்வின் ட்ரிக்மின்சி போன்றோரும் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

     அமெரிக்கா, கடனா, மலேசியா, ஆஸ்திரேலியா, சுவிற்சர்லாந்து, ஜெர்மனி, மொரீசியர், பிரான்ஸ், இலங்கை, போன்ற பல நாடுகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட பன்னாட்டுப் பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.

     SRM பல்கலைக்கழத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பேராசிரியர் முனைவர் சு. பொன்னுசாமி அவர்கள் பட்டயமளிப்பு விழாவினை ஒருங்கிணைத்ததுடன் நன்றியுரை வழங்கினார்கள். ஓராண்டுகாலமாக நடந்த இந்தப் படிப்பினைச் செயல்படுத்திய தமிழ்ப்பேராயப் பேராசிரியர் முனைவர் இல. சுந்தரம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

     தென்னாப்பிரிக்காவில் இந்தப் படிப்பில் பயின்றுவந்த மாணவர்களுக்குப் பயிற்சியளித்த திருமதி மு. தர்மகுமாரி, முனைவர் முருகன், முனைவர் ஆ.மு. பிள்ளை, திரு. கி.சின்னப்பன் ஆகியோரும் செயலர் மருத்துவர் மேஸ்திரி அவர்களும் நிருவாகி திருமதி நரிசா சினன் அவர்களும் நிகழ்ச்சியைச் திறம்பட நடத்த உதவினார்கள்.

     வரும் கல்வியாண்டில் 2015 சூலை மாதம் தொடங்கி மே 2016 முடியும் வகையில் இந்தப் பட்டயப் படிப்பைத் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் நடத்துவதற்குரிய பணிகள் நடைபெற்றுள்ளன. மேலும் பிறநாடுகளில் தொடங்குவதற்குண்டான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

     இந்தப் படிப்பு உலகத் தமிழர்களிடையே பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உலகத் தமிழர்கள் தமிழ்க் கல்வி பெறுவதற்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம். தென்னாப்பிரிக்கத் தமிழ் வரலாற்றில் இது ஒரு திருப்புமுனை; மைல்கல்.

NO COMMENTS

Leave a Reply