” பெண்ணே யாமிருக்க பயமேன்” – தற்காப்பு கருவிகள்

0
128
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

இன்றைக்கு பெண்கள் சமூகத்தில் சகல துறைகளிலும் சாதனை செய்கிறார்கள் என்றாலும், இன்னொரு புறம் வீட்டில் இருக்கும் ஒரு பெண் அலுவலகத்திற்கு, கல்லூரிக்கு சென்று பத்திரமாக வீடு திரும்புவது என்பதே ஒரு சாதனையாகத்தான் இருக்கிறது.  வெளியில் தைரியமாக நடமாடும் ஒவ்வொரு பெண்ணிற்கு பின்னாலும் வீட்டில் அவள் தாயின் பையம் அடிவயிற்று நெருப்பாக எரிந்துகொண்டே இருக்கிறது. காரணம் இன்று செய்தித்தாள்களிலும் , சமூக ஊடங்களிலும் பெண்ணுக்கு நேர்ந்த கதி என்ற தலைப்புகளில் வெளிச்சம் போட்டு காட்டப்படும் அவலங்கள் ஏராளம். அதற்காக யாரும் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கவும் முடியாதுதான். நாம் செய்யவேண்டியதெல்லாம் அவர்களுக்கு தக்க பாதுகாப்பும், தற்காப்பும் கொடுப்பதுதான்.

இன்றைய பெண்கள் தனியாக அலுவலங்களுக்கும், தொழில்ரீதியாகவும், வெளிநாடுகளுக்கும் பயணிக்க வேண்டியுள்ளது. குழந்தைகளை அழைத்துக் கொண்டு கடை, மருத்துவமனை, பார்க் என்றும் செல்லவேண்டியிருக்கிறார்கள். இங்கெல்லாம் சமூக விரோதிகளினால் பலவிதமான தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். ஆட்டோ, பஸ், கால் டாக்சி என்று பயணிக்கும் போதும், சுயமாய் கார் ஓட்டிச்செல்பவர்கள் பெரிய கட்டிடங்களின் கார் பார்க்கிங்களிலும் கூட இம்மாதிரியான ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள். தேவை ஏற்பட்டால் பெண்கள் தங்களின் கூறிய விரல் நகங்களை கூட ஆயுதமாக பயன்படுத்தலாம் என்று காந்திஜி கூறியிருக்கிறார். ஆனால் இப்போது சந்தையில் பல்வேறு விதமான ஆயுதங்கள், ஆயுதங்கள் என்றே தெரியாத வகையில் கிடைக்கின்றன. அவை என்னென்ன என்று தெரிந்துவைத்துக்கொண்டால் இளம் பெண்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

 

ஸ்டன் கன்:

Stun gun

     இது மின்சாரத்தின் துணைக்கொண்டு தற்காத்துக் கொள்ளும் ஒரு எளிமையான ஆயுதம். இதை ஆபத்து உண்டாக்குபவரின் உடலில் படும்படி பிடித்தவுடன் அதிக வோல்டேஜ் மின்சாரம் குறிப்பிட்ட சில நெடிகளுக்கு அவரின் உடலில் பாய்ந்து செயலிழக்க வைத்து விடும். குறுகிய நேரத்திற்கு எந்த வித நிரந்தர காயமோ, பக்க விளைவுகளோ இன்றி அந்த நபரை செயலிழக்க வைப்பதால் பெரிய அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடுமோ என்று பயம் கொள்ளத்தேவையில்லை. எனவே தனியாக ஆபத்தில் சிக்கும் பெண்களுக்கு இது மிகவும் உபயோகமானதாகும். இதை தொட்டவுடன் அரை நொடியில் கைகளை இழுத்துக்கொள்ளவும், அடுத்த ஓரிரு நொடியில் உடலின் தசைகள் சுருங்கிக் கொள்ளவும், குழப்பமான மனநிலைக்கு செல்லவும் நேரும். 3 முதல் 5 நொடிகளில் கீழே விழுந்து விடவும் நேரலாம். அந்த நேரத்தை பயன்படுத்தி தப்பிச் சென்று விடலாமே.

ஸ்டன் பேட்டன்:

stun baten

   இதுவும் ஸ்டன்கன் போன்றது தான் என்றாலும் இதில் கண்களை கூசச் செய்யும் விளக்கு இருக்கும். அதிக ஓளி பாய்ச்சும்போது எதிரி ஒருநொடி என்ன செய்வதென்று புரியாமல் குழப்பதிற்கு தள்ளப்படுவார். அந்த நேரத்தில் அவரை தள்ளிவிட்டு அந்த பெண் தப்பிவிடலாம். பார்ப்பதற்கு ஒரு அழகான பேனா போன்று இது இருப்பதால் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது. மேலும் இது மின்சாரத்தில் இயங்குவதால் அவ்வப்போது சார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

பெப்பர் ஸ்ப்ரே:

Pepper spray

         பெயரை படித்தவுடன் இது ஏதோ சமையலுக்கு உபயோகப்படும் பொருள் என்று நினைத்துவிடாதீர். இது மிளகுத்தூள் கொண்டதல்ல ‘ஒலியோரெசின் கேப்சிகம்’ (மிளகாய் போன்ற ஓரு தாவரம்) என்ற பொருளின் வாயுவாகும் ஓசி ஸ்ப்ரே என்றும் இது அழைக்கப்படுகிறது.

  இந்த ஸ்ப்ரேவை அழுத்தும் போது கிட்டத்தட்ட 5 முதல் 7அடி உள்ளவரின் கண்களையும் கூட சென்று தாக்கும். இந்த வாயு பட்டவுடன் கண்களிலிருந்து நீர் வடிய, கண் வலிக்க தற்காலிகமாக பார்வையும் உறைந்து விடும். இது மிகவும் எளிதாக உபயோகிக்கக் கூடியது மட்டுமின்றி பார்க்க லிப்ஸ்டிக் போலவும் சிறிய பெர்ப்யூம் பாட்டில் பொலவும் கைக்கடக்கமாக இருக்கும்.

பர்சனல் அலாரம்:சாவிக்கொத்து போல் இருக்கும் இதை பேனாவுடனோ வண்டி சாவியுடனோ, மொபைல் போனுடனோ கோர்த்து வைத்துக்கொள்ளலாம். இதன் பட்டனை அழுத்தியவுடன் பீப் பீப் என்று வீறிட்டு சத்தம் எழ திருடன் பயந்து ஓட வேண்டியதுதான். இதே போன்ற அலார்ம்களை வீடுகளில் ஜன்னல்களிலும், கதவுகளிலும் கூட பொருத்திகொள்ளலாம்.

       இம்மாதிரியான சிறு கருவிகளை கையிலோ கைப்பையின் மேலாகவோ வைத்திருக்க வேண்டும். இக்கருவிகள் இல்லையென்றாலும் கூர்மையாக இருக்கும் எந்த ஆயுதத்தையும் உதாரணத்திற்கு தலையில் போடும் க்ளிப் சேப்டி பின், குடை, பேனா என்று எது  கிடைத்தாலும் அதை ஆயுதமாக உபயோகிக்கும் சமயோசிதத்தை ஒவ்வொரு பெண்ணும் கற்று வைத்திருக்க வேண்டும்.

இதையெல்லாம் விட மிகப்பெரிய ஆயுதம் தைரியம். மன தைரியத்தை ஒரு போதும் எந்த சூழ்நிலையிலும் விட்டுவிடாதிருக்க கற்றுக்கொண்டால் பெண்கள் பாதுகாப்பு என்பது எப்போது அவர்களிடமே இருக்கும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்