குழந்தைகளுக்கு வழங்கும் நெஸ்லே செர்லாக் பால்பவுடரில் உயிருடன் பூச்சிகள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை செல்வபுரம் பகுதியைசேர்ந்தவர் ஸ்ரீராம். தனியார் மென்பொருள் நிறுவன ஊழியரான இவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு பேரூரிலுள்ள மருந்துக் கடையில் தனது ஓரு வயது குழந்தைக்காக நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக் பால்பவுடரை வாங்கியுள்ளார்.
திங்களன்று அதனை குழந்தைக்கு கொடுப்பதற்காக, ஸ்ரீராமின் மனைவி பிரீத்தி அந்த செர்லாக் பாக்கெட்டை திறந்து பார்த்தபோது, அது பூஞ்சைகள் பிடித்து இருந்ததுடன், அதில் ஏராளமான வண்டுகள் உயிருடன் இருந்ததைக்கண்டு அதிர்ச்சி யடைந்தார். அதேநேரம், பாக்கெட்டில் தயாரிப்பு தேதி பயன்படுத்தும்படியாகவே அச்சிடப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த நிறுவனத்தில் தொடர்பு கொண்டபோது, எந்த பதிலும் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து பச்சிளம் குழந்தைகளின் உணவு பொருட்களில் தொடர்ந்து அலட்சியம் காட்டும் சம்பந்தப்பட்ட நெஸ்லே நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள உணவு தரக்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அதிகாரியிடம் ஸ்ரீராம் புகார்அளித்தார்.
இதுகுறித்து உணவு தரக்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அதிகாரி கதிரவன் கூறுகையில், நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக்கில் புழுக்கள், வண்டுகள் இருந்ததாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாகவும், அதனை ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன்முடிவை கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்ட நிலையில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களில் பூச்சிகள் இருந்தது பெற்றோர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.