ஆர்கானிக் ஆரோக்கியம் – உண்மையா?

0
81
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

ஆர்கானிக் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது, நோய்களை தடுக்கிறது, சுவை அதிகமாக இருக்கும் என்றெல்லாம் தெரியும் ஆனாலும் இதற்கான காரணங்கள் என்னென்ன, நாம் கடையில் வாங்குவது உண்மையில் ஆர்கானிக் தானா, ஆர்கானிக் பொருட்களின் சந்தை எப்படியுள்ளது போன்றவைகளையும் தெரிந்துக்கொள்வது நல்லது.

இந்தியாவில் உணவுப்பொருட்கள், அழகு சாதனப்பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் என்று அனைத்திலும் ஆர்கானிக் பொருட்களின் உற்பத்தியும், உபயோகமும், ஏற்றுமதியும் உயர்ந்து கொண்டே வருகிறது. வருடத்திற்கு 20 முதல் 25 சதவிகித வளர்ச்சியை கொண்டுள்ளது ஆர்கானிக் பொருட்களின் சந்தை. ஆர்கானிக் பொருட்களின் சில்லறை விற்பனை மட்டுமின்றி ஏற்றுமதியும் வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 2012 ஆம் ஆண்டில் ரூபாய் 1000 கோடி மதிப்புள்ள ஆர்கானிக் பொருட்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அது மேலும் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது. பருப்பு வகைகள், காபி, டீ, மசாலா பொருட்கள் , பாஸ்மதி அரிசி, எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி போன்ற பொருட்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மக்களிடம் இந்த அளவிற்கு வரவேற்பு பெற்று வரும் ஆர்கானிக் பொருட்களுக்கு ஏன் இந்த மவுசு. அதில் அப்படி என்ன விசேஷம் என்று கேட்கலாம். எளிதாக சொல்ல வேண்டும் என்றால் இப்பொருட்களில் ரசாயனப்பொருட்களின் நச்சுத்தன்மை இல்லை என்பதும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, இயற்கைக்கு இணக்கமான முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதே உண்மை.

பொருட்களின் சாகுபடி மற்றும் உற்பத்தியில் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், நோய்க்கான மருந்துகள் (ஆண்டிபயாடிக்) என்று பல விதமான ரசாயனப்பொருட்கள் உபயோகப்படுத்தப்படுவது தெரிந்ததே. இதைத் தவிர மரபணு மாற்றம் செய்யப்பட்ட செயற்கையான வீரியம் கொண்ட தாவரம் மற்றும் இறைச்சிக்கான உயிரின வகைகளும்உணவிற்காகவும் மற்ற உபயோகத்திற்காகவும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவைகள் கெடுதல் விளைவிக்கக்கூடியவை இல்லையென்று விஞ்ஞானிகள் கூறினாலும் இயற்கை ஆர்வலர்களின் கணிப்பு வேறுமாதிரியாக இருப்பதால் ஆரோக்கியத்தில் நாட்டம் உள்ள மக்கள் ஆர்கானிக் பொருட்களை நாடுகின்றனர்.

இயற்கையான விதைகள், இயற்கையான உரங்கள் (மண்புழு உரம் போன்றவை) எரு, இயற்கை வேர் ஊக்குவிப்பான்கள் மற்றும் இயற்கை பூச்சிக்கொல்லிகள் போன்றவைகளை உபயோகிப்பது, பூச்சிகளை விரட்ட பறவைகள் மற்றும் பிற வழிகளை நாடுவது, மிருகங்களுக்கு நோய்க்காக ஆண்டிபயாடிக் போன்றவைகளை உபயோகிக்காமல் வளர்ப்பது போன்ற பல கடுமையான முறைகளை ஒழுங்காக பின்பற்றி பொருட்களை உற்பத்தி செய்யும் பண்ணைகளுக்கே ஆர்கானிக் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்தியாவில், உற்பத்தி செய்யப்படும் மற்றும் தயாரிக்கப்படும் பொருட்களுக்கும் ஆர்கானிக் தரச்சன்றிதழ் பெற சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. எனவே நுகர்வோர் தாங்கள் வாங்கும் ஆர்கானிக் விளைபொருட்கள், அச்சான்றிதழ் பெற்றதுதானா என்பதை உறுதி செய்துக்கொள்வது நல்லது. பொருட்களின் லேபிளில் தரச்சான்றிதழ் அளிக்கும் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோ இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஆர்கானிக் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பற்றிய தகவல்களும் தெரிந்திருப்பது அவசியம்.

ஆர்கானிக் பொருட்களில் தேவையற்ற நச்சு வேதிப்பொருட்கள் இல்லை என்பதும் இதனாலேயே அதன் சுவை சாதாரணமாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விட அதிகம் என்பதும், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்து இவற்றில் அதிகம் என்பதும் உண்மை.

இப்படி பல நன்மைகள் இருந்தாலும் ஆர்கானிக் பொருட்களின் விலையோ இந்தியாவில், சாதாரணமாக விளைவிக்கப்படும் பொருளை விட கிட்டதட்ட மூன்று மடங்கு அதிகமாகவே இருக்கிறது. ஆர்கானிக் பொருட்களுக்கான தேவை அதிகமாகி உற்பத்தியும் அதிகமானால் இவற்றின் விலையும் கணிசமாக குறையலாம் என்ற நம்பிக்கையோடு ஆர்கானிக் பொருட்களின் உபயோகத்தை வரவேற்போம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்