மோடி ஒரே ஆண்டில் 18 நாடுகளுக்கு பயணம் ~ சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்

ஒரே ஆண்டில் 18 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்திருப்பது முன்னெப்போதும் இல்லாத ஒன்று என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. விமர்சித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் தில்லியில் கடந்த இரண்டு நாட்களாக நடை பெற்றது. கட்சியின் 21வது அகில இந்தியமாநாடு விசாகப்பட்டினத்தில் நிறைவு பெற்ற பின்னர் நடந்துள்ள முதல் அரசியல் தலைமைக்குழு கூட்டம் இது ஆகும். இக்கூட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் ஞாயிறன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய சீத்தாராம் யெச்சூரி, பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விமர்சித்தார்.
‘கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் பிரதமர் மோடி 18 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார் என்பதை நாம் கவனிக்க வேண்டி யுள்ளது. இந்த குறைந்த காலத்திற்குள் இத்தனை நாடுகளுக்கு இதற்கு முன்பு இந்தியாவின் எந்தவொரு பிரதமரும் பயணம் செய்ததில்லை’ என அவர் குறிப்பிட் டார். ‘இதற்கு முன்பு அவருக்கு மறுக்கப்பட்ட விசாக்களை மீண்டும் பெறுவதி லேயே தனது பொழுதை மோடி கழித்துக் கொண்டிருக்கிறார்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுடனான அவரது சந்திப்புகள் என்பவை அவர் இன்னும் தேர்தல் மனநிலையிலேயே இருக்கிறார் என்பதற்கான விரிவாக்கமாகத்தான் உள் ளது’ என்றும் யெச்சூரி கூறினார்.வெளிநாடுகளில் சென்று இந்திய எதிர்க்கட்சிகளைப் பற்றி தரக்குறைவாக பிரதமர் மோடி தாக்கிப் பேசுவது குறித்துவிமர்சித்த சீத்தாராம் யெச்சூரி, ‘எதிர்க்கட்சி என்ற முறையில் நாங்களெல்லாம் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டால் இந்தியாவின் மாண்புகளையும் கவுரவத் தையும் பேணும் விதத்திலேயே பேசி வருகிறோம்.
ஆனால் பிரதமரோ இன்னும் தேர்தல் பிரச்சார மனநிலையிலேயே இருக்கிறார். வெளிநாடுகளில் சென்று அவர் இந்திய எதிர்க்கட்சிகளைப் பற்றி விமர்சிப்பது பொருத்தமானதல்ல’ என்றும் குறிப்பிட்டார். கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டத்தில் மோடியின் சீனப் பயணம் குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டது எனக் குறிப்பிட்ட யெச்சூரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை இந்திய – சீன உறவுகள் மேம்பட வேண் டும் என்பதை எப்போதுமே ஆதரித்து வருகிறது என்றும், ‘இந்த உறவுகள் இரு நாடுகளின் மக்களுக்கும் பரஸ்பரம் பலன் அளிப்பதாக அமைய வேண்டும்’ என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நட்புறவின் தொடர்ச்சியானது இந்திய – சீன மக்கள் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதாக அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.