படிப்பது பெரிதல்ல. படித்ததை நினைவில் வைப்பதும், நினைவில் உள்ளதை மீண்டும் வெளிப்படுத்த முடிவதும் தான் பெரிது. ஞாபக சக்தி நிறைய வேண்டும் என்று கேட்காத மாணவர்களே இருக்க முடியாது. ஞாபகத்திறன் நன்றாக இருந்தால் அதிக நேரம் படிக்க வேண்டியதும் இல்லை.
மூளையில் ஞாபகங்கள் எப்படி ஏற்படுகிறது :
ஞாபகம் என்பது ஒரு விஷயத்தை நாம் பார்த்தாலோ, படித்தாலோ உணர்ந்தாலோ அது நம் நரம்புகளின் மூலம் மூளையை அடைகிறது. நாம் பார்த்த தகவல்மூளைக்கு செல்வது என்பது, ஒரு நரம்பு செல் அந்த தகவலை சமிக்ஞையாக மாற்றி அடுத்த நரம்பு செல்லுக்கு அனுப்புகிறது. அந்த செல் அடுத்த செல்லுக்கு கடத்துகிறது. இரண்டு செல்களுக்கு இடையே பாதை ஒன்று இருக்கும். இதுவே சினாப்சிஸ். இந்த பாதை அல்லது சினாப்சிஸ் தகவல்களின் அழுத்ததிற்கு ஏற்ப உறுதியாகிறது. அந்த வகையில் அடிக்கடி ஒரு தகவல் ஒரே பாதையில் சென்றால் அந்த பாதை பலப்படும். அதனால் தான் நாம் அடிக்கடி பார்க்கும் கேட்கும் விஷயங்கள், எண்கள், பெயர்கள் நமக்கு ஞாபகத்தில் இருக்கிறது. பொதுவாக தகவல்கள் நம்முடைய விருப்பம், தேவை, கவனம் போன்றவற்றின் அளவிற்கு ஏற்பவே நம் மூளையில் அழுத்தமாகவோ லேசாகவோ பதிகிறது. சரி ஞாபகம் வைத்துக்கொள்வதில் மூளையின் பங்கை பார்த்தோம். இனி அதைக்கொண்டு நாம் படித்ததை எப்படி நினைவில் தக்க வைப்பது என்று பார்ப்போம்.
படிக்கவேண்டியதில் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் :
நமக்கு பிடித்த விஷயங்களில்தான் நம் கவனம் இருக்கும். அதை தான் நாம் விரும்பி அடிக்கடி படிக்கவோ தெரிந்துக்கொள்ளவோ விரும்புவோம். எனவே நாம் படிக்க வேண்டிய விஷயத்தில் ஏதாவது ஒரு பிடித்த அம்சத்தை தேடிக்கண்டுபிடிக்க வேண்டும்.
தகவல்களை ஒரு மரமாக சித்தரித்துக்கொள்வது :
நம் மனதில் காட்சியாக, படமாக பதிய வைத்துக்கொண்டால் அது ஆழமாக பதியும். எனவே நிறைய விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் அதை ஒரு பெரிய மரமாக நினைவகப்படுத்த வேண்டும். முதலில் அடிமரம், அதிலிருந்து கிளைகள், அதிலிருந்து இலைகள் என்று ஒவ்வொன்றும் மற்றவற்றொடு தொடர்புடையதாக இருக்க வேண்டும். அப்பொழுது முதலும் பொதுவானதுமான தகவலை நினைத்தவுடன் அத்துடன் தொடர்புடைய மேலும் குறிப்பான மற்றவை என்று படித்த எல்லா தகவல்களும் ஞாபகத்தில் வரும்.
தெரிந்த ஒன்றோடு தொடர்பு படுத்திக்கொள்வது :
புதிதாக படிக்கும் ஒன்றை ஏற்கனவே நன்கு தெரிந்த ஒன்றோடு தொடர்பு படுத்திக்கொள்ளும்போது தெரிந்த ஒன்றின் நினைவு பாதை (சினாப்சிஸ்) பலமாக இருப்பதால் புதிய தகவலும் பலமானதாக ஆகிவிடும்.
திரும்ப திரும்ப எழுதுவது :
திரும்ப திரும்ப செய்யும் போது தகவல் பாதை (சினாப்சிஸ்) பலப் படுகிறதல்லவா? எனவே திரும்ப திரும்ப எழுதி பார்க்கும்போது தகவல்கள் நிதானமாக ஓரே பாதையில் திரும்ப திரும்ப பதிகிறது. அப்படி எழுதும்போது அப்படியே பார்த்து காப்பி அடிப்பது தவறு. ஒருமுறை படித்துவிட்டு பார்க்காமல் எழுதி பார்க்கும்போது தகவல்கள் பாதையில் மேலும் கீழுமாக பயணிக்கிறது. இப்படி செய்யும்போது நீங்கள் படித்ததை நீங்கள் உங்களுக்கே சொல்லிக்கொடுத்தது போல் இருக்கும்.
ஞாபகத்திறனை மேம்படுத்த தூக்கம் அவசியம் :
இரவில் மட்டும் தான் தூங்க வேண்டும் என்ற அவசியமில்லை, பகலில் கூட படிப்பதற்கு முன்பும் பின்பும் சிறிது நேரம் தூங்கலாம். தூக்கம் படித்ததை தக்க வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது.