பிங்க் சிட்டி ஜெய்ப்பூர் – அழகும் கம்பீரமும் ஒருங்கே

0
57
Facebook இல் பகிர்ந்துகொல்லவும்
Twitter இல் ட்வீட் செய்யவும்

கோடைக்காலத்தை சுற்றுலா காலம் என்றும் சொல்லலாம். இந்த விடுமுறைக்கு எங்கு செல்வது என்று யோசிப்பவர்களுக்கு ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்பூர் நகரத்தை பற்றி தெரிந்தால் நிச்சயம் அங்கு செல்ல வேண்டும் என்று தோன்றும். சுற்றுலா என்பது ஏதோ ஒரு இடத்தை முடிவு செய்து மற்றவற்றை அங்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டு போனோம், தங்கினோம், சுற்றினோம் என்று வரக்கூடாது. ஒரு ஊருக்கு செல்வதற்கு முன் அந்த ஊரைப்பற்றிய அடைப்படை விஷயங்கள், சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள், சிறப்புகள் என்று தெரிந்து வைத்துக்கொண்டு போனால் அது நம் பயணத்தை எளிதாக்குவதோடு,  நம் சுற்றுலா அனுபவத்தை இன்னும் சுவாரசியமானதாக்கும். சரி ஜெய்பூர் என்றவுடன் சில சினிமா பாடல்களில் சிவப்பு சிவப்பாக பெரிய கோட்டைகளை பார்த்த ஞாபகம் வருகிறதா. அந்த கோட்டைகளுக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொண்டால் நேரில் சென்று பார்க்கும்போது இன்னும் அழகாக அர்த்தமுள்ளதாக இருக்கும்.

இந்தியாவின் மிகப்பழமையான அழகிய, அற்புதமான நகரமான ஜெய்பூர் தன் அடையாளமாக திகழும் அந்த சிவப்பு கோட்டைகளால் “இளஞ்சிவப்பு நகரம்” என்று அழைக்கப்படுகிறது. 1876-ம் ஆண்டு இரண்டாவது சவாய் ஜெய் சிங் அவர்கள் வேல்ஸ் இளவரசரை தன் நகரத்திற்கு வரவழைத்தார். அந்த நேரம் முழு நகரமே இளஞ்சிவப்பு நிறத்தில் வண்ணம் பூசப்பட்டு இருந்தது. அன்றிலிருந்து ஜெய்ப்பூர் நகரம் உலகளவில் “பிங்க் சிட்டி” என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது.

மிதமான பாலைவன பிரதேசத்தில் அமைந்துள்ள ஜெய்பூரில் ஆடம்பரமான அரண்மனைகள், கம்பீரமான கோட்டைகள், ஹவேலி மாளிகைகள் என்று உலகெங்கிலும் சுற்றுலா பிரியர்களை தன்னகத்தே கவர்ந்திழுப்பதில் சிறப்பிடம் பெற்றுள்ளது.

வாஸ்து நகரம் :

வீடு கட்டும்போது வாஸ்து சாஸ்திரம் பார்த்து கட்டுவார்கள், ஆனால் ஒரு நகரமே வாஸ்து சாஸ்திரத்தின்படி வடிவமைக்கப்பட்டிருப்பது ஆச்சர்யம்தான் இல்லையா. வாஸ்து சாஸ்திரத்தின் படி கட்டிடகலை விதிமுறைகளின் படி உருவாக்கப்பட்ட முதல் நகரம் “ஜெய்பூர்”. வான சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்ற மஹாராஜா இரண்டாம் ஜெய்சிங் நவக்கிரகங்களின் எண்ணிக்கையான ஒன்பது மற்றும் அடுக்குகளாக கொண்டவாறு நகரத்தின் மண்டலங்களை வடிவமைத்துள்ளார்.

சிட்டி பேலஸ்

சிட்டி பேலஸ் :

மிக கம்பீரமான மாளிகையாய் திகழும் சிட்டி பேலஸ் ஜெய்ப்பூர் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. 1729 முதல் 1732- ல் கட்டப்பட்ட இந்த பிரம்மாண்டமான அரண்மனை  ஒரு பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது. இது சந்திரா மஹால் மற்றும் முபாரக் மஹால் என்று இரண்டு பிரிவாக உள்ளது. சந்திரா மஹால் மியூசியமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு ராஜ்புத்திரர்களின் ஆயுதங்கள், ராஜாவின் ஆடைகள் போன்றவை அலங்கரிக்கப் பட்டுள்ளன.

ஹவா மஹால் (காற்று மாளிகை)

ஹவா மஹால் :

1799-ல் மஹாராஜா பிரதாப் சிங்-மூலம் கட்டப்பட்ட இந்த மாளிகை “காற்றின் மாளிகை” என்று அழைக்கப்படுகிறது. அதாவது இந்த மாளிகையில் மொத்தம் 953 ஜன்னல்கள் உள்ளன. ஐந்து அடுக்கு கொண்ட உயரமான இந்த மாளிகையில் படிக்கட்டுகள் கிடையாது. சரிவான தரைபகுதியில் ஏறும்படி உள்ளது. ராஜபுத்திர மஹாராணியர்கள் மேலிருந்து ஜெய்பூர் நகரத்தை பார்க்கவே இந்த மாளிகை கட்டப்பட்டதாம்.

ஜந்தர் மந்தர்

ஜந்தர் மந்தர் வானவியல் கூடம் :

ஜந்தர் மந்தரில் மிகப்பெரிய வானவியல் கூடம் உள்ளது. ராஜா இரண்டாவது ஜெய்சிங் உருவாக்கிய இங்கு கட்டிடவியல் , வானியல், தத்துவம் என அனைத்தும் சார்ந்த பல்வேறு உபகரணங்கள் உள்ளன. கணிதவியல் உபகரணங்களாக நேரம் கணிக்கிடும் கருவி, வானியல் கூறுகளை ஆய்வு செய்யும் கருவி போன்றவை உள்ளன.

ஆமேர் மார்பல் கோட்டை

ஆமேர் மார்பல் கோட்டை :

ஆமேர் என்ற இடத்தில் ராஜா மான்சிங் 1592-ல் கட்டிய கோட்டைதான் இது. ஜெய்பூரில் இருந்து 11 கி.மி தூரத்தில் உள்ள ஆமேர் கோட்டை சிகப்பு மண்கள் மற்றும் மார்பிள் கற்களால் கட்டப்பட்டது. மூன்று நுழைவு வாயில் கொண்ட கோட்டையில் நான்கு முற்றங்கள் உள்ளன. இந்த கோட்டையில் யானை மீது சவாரி செய்யும் வாய்ப்பு உள்ளது. இது பத்து நிமிடத்தில் நம்மை கோட்டை மற்றும் உயரமான மலைப்பகுதிவரை அழைத்து சென்று விடும்.

யானை சவாரி :

ஜெய்பூர் செல்பவர் யானை சவாரியை அனுபவிக்காமல் வரக்கூடாது. ஆமேர் கோட்டை தான் அதற்கு சிறந்த இடம். தேரா ஆமேர் என்பது ஆரவல்லி மலைதொடரின் கீழ் பகுதியில் உள்ளது. யானை சவாரி என்பது மலையின் நடுப்பகுதி வரை அழைத்து செல்லப்படும். இரவு நேர சவாரியும் உள்ளது. யானைக்கு களைப்பு வருகிறதோ இல்லையோ இவ்வளவு பெரிய இடத்தை சுற்றிப்பார்க்கும் நமக்கு நிச்சயம் வரும் இல்லையா அதற்கு சிறந்த உணவும் தரப்படுகிறது.

ஜெய்ப்பூர் என்பது சிறந்த சுற்றுலாதலம் மட்டுமல்ல,நாம் கற்றுக்கொள்ள, அனுபவிக்க, உற்சாகமாய் கொண்டாட, திகைப்பூட்டும் பரவசமான அனுபவம் என பலவற்றை தரும் நகரமாக உள்ளது. ஜெய்பூரை சுற்றி பார்க்க நிச்சயம் ஒரு நாள் போதாது. அதனால் பல ஊர்களை திட்டம்போட்டுவிட்டு போகும்வழியில் ஜெய்பூரையும் பார்த்துவிடலாம் என்று பத்தோடு பதினொன்றாக கடந்து போய்விட முடியாது. ஜெய்பூருக்கு என்று தனியாக ஒரு கோடை விடுமுறையை ஒதுக்குங்கள். நிச்சயம் அந்த விடுமுறையை உங்களால் மறக்க முடியாதபடி செய்துவிடும் இந்த அழகிய ”பிங்க் சிட்டி.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்