சினிமாவை ஏழைகளுக்கு எடுத்துச் செல்லவேண்டும்! – ஆர்கே

‘சினிமாவை ஏழைகளுக்கு எடுத்துச் செல்லவேண்டும்’ என்று நடிகர் ஆர்கே கூறினார்.இது பற்றிய விவரம் வருமாறு:

மக்கள் பாசறை தயாரித்த ஆர்கேவின்  ‘ என்வழி தனி வழி’ படத்தின் 25வது நாள் விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.இந்த விழாவில் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் ஆர்கே பேசும்போது
“இன்று சினிமாவுக்கு என்ன ஆயிற்று? கடந்தசில ஆண்டுகளாகவே சினிமா சிரமத்தில் இருப்பதாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நிறைய படங்கள் வருகின்றன. நிறைய படங்கள் தோல்வி அடைகின்றன. ஓடுவதில்லை. சூப்பர் ஸ்டாரிடமே பணத்தை திருப்பிக் கேட்கிற நிலை உள்ளது.

வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்களுக்கே திரையரங்கிற்கு யாரும் வருவதில்லை. நாலாவது நாள் நல்லபடம் என்று கேள்விப் பட்டுப் பார்க்கப் போனால் கூட, படம்  திரையரங்கில் இருப்பதில்லை.

ஏன் மக்கள் தியேட்டர் பக்கம் வருவதில்லை? மக்கள் வராததற்கு யார் காரணம்?

எல்லா வியாபாரத்திலும்  விழா, பண்டிகை காலங்களில்,விசேட நாட்களில் 10 சதவிகிதம் தள்ளுபடி 20சதவிகிதம் தள்ளுபடி 30,சதவிகிதம்  40சதவிகிதம்  ,60 சதவிகிதம் வரை தள்ளுபடி  கொடுக்கிறார்கள். சினிமாவில் மட்டும் பண்டிகை காலங்களில்,100 ரூபாய் டிக்கெட் 300 ரூபாய் ஆகும். இது என்ன நியாயம்? சென்னையை மட்டும் வைத்து தமிழ்நாட்டை கணிக்க முடியாது.

மாதம் பத்தாயிரம் ரூபாய் வருமானம் உள்ளவன் மனைவிக்குப் புடவை ,துணிமணி எல்லாம் எடுத்துவிட்டு ஆசை யோடு படம் பார்க்கப் போகிறான்.அங்கே 100 ரூபாய் டிக்கெட் 300 ரூபாய் என்கிறார்கள். யோசிக்கிறான்.3 நாள் பொறுத்துக் கொண்டால் 4 வது நாள் திருட்டு விசிடி வந்துவிடும். 25 ரூபாயில் பார்த்து கொள்ளலாம் என்று இருந்து விடுகிறான்; திரும்பி  வந்து விடுகிறான். அப்படி அவனுக்குப் பொருளாதாரப் பிரச்சினை

அவன் சினிமாவை ரசிப்பவன்தான். ஹீரோவை விரும்புகிறவன்தான். ஆனால் அவனைத் திருட்டு விசிடி வாங்கவைத்தது நாம்தான். அவனை திருட்டு விசிடிவாங்க வைத்துவிட்டோமே? அது யார் தவறு?

அன்று கோடிக் கணக்கான பேர் பார்த்த சினிமாவை இன்று யார் பார்க்க வருகிறார்கள்? சினிமா இன்றைக்கு பணக்கார பைனான்சியர் கையில்  சிக்கிக் கொண்டு விட்டது. ஏரியாக்களை வாங்கிக் கொள்கிறார்கள். தொழில் மாறிவிட்டது.

திருட்டு விசிடியை சரி என்று சொல்லவில்லை. ஆனால் அதை ஒழிக்க முடியவில்லையே. மக்கள் ஆதரவு இருக்கும் எதையும்ஒழிக்க முடிவதில்லை. அரசே நினைத்தாலும் திருட்டு விசிடியை தடுக்க முடியாது.

ஒரு காலத்தில் கேபிள்டிவிக்கு அனுமதி கிடையாது. எல்லாமே திருட்டுத்தனமாகத்தான் இயங்கின. அதன் தாக்கத்தை பார்த்து அரசே ஏற்று நடத்தும் அளவுக்கு போகவில்லையா?

ஒரு படத்தை ஓடவைப்பது யார்?

ரசிகர்கள் ஒரு ஹீரோ படத்தை 50 படங்கள்கூடப் பார்த்திருப்பார்கள்.பலமுறை பார்த்திருப்பார்கள். அதற்காகப் பல லட்சம்கூட இழந்திருக்கிறார்கள்.
என்னபலன்? பேண்ட் வாங்கினால் சட்டை இலவசம் என்கிற காலம் இது.அவர்களுக்கு இதனால் என்னபலன்?
ஏன் ரசிகர்களை நம்ப முடியாதா?

100 நாள் படப்பிடிப்பு நடத்த முடிகிறவர்களால் தியேட்டர்களை வாடகைக்கு எடுக்க துணிச்சல் வருவதில்லையே ஏன்?இன்று தியேட்டர்காரர்களிடம் அடிமையாக இருக்கிற நிலை உள்ளது.

படம் 100 நாள் ஓடும் நம்பிக்கை இருந்தால் தியேட்டரை வாடகைக்கு எடுங்கள்  உன் படம் 100 நாள் ஓடுமா என்று சவால் விட்டால் தமிழ்நாட்டு ரசிகர்களை நம்பி நான் அந்தச் சவாலை ஏற்றுக் கொள்கிறேன்.

இபோதாவது மாற்றி யோசியுங்கள். சினிமாவில் அணுகுமுறை மாற வேண்டும். இதுவரை பணக்காரர்களிடம் இருந்த சினிமாவியாபாரம் இனி ஏழைகள் பக்கம் போகட்டும்.

1000 டிக்கெட் வாங்கினால் 100 டிக்கெட் எடுத்துக் கொள்ளச் செய்யுங்கள் 1000 டிக்கெட்விற்றால் ஒரு ஷோ ஓட்டிக்கொள் என்று கூறுங்கள் படத்தை 100 நாள் ஓட்டமுடியாதா? நிச்சயம் முடியும். வியாபாரத்தை மாற்றி யோசியுங்கள். சினிமாவை,அதன் வியாபாரத்தை ஏழை மக்களிடம் எடுத்துச் சென்றால் சினிமாவும் வாழும்.ஏழைகளும் வாழ்வார்கள். இன்று முதல் சினிமாவை, ஏழை மக்களிடம் எடுத்துச் செல்வோம்.இந்த மாற்றத்தை இன்றே  தொடங்குவோம்.” இவ்வாறு ஆர்கே பேசினார்.

இவ்விழாவில் ‘ என்வழி தனி வழி’ இயக்குநர் ஷாஜி கைலாஷ், கதை வசனகர்த்தா பிரபாகர், கலை இயக்குநர்கள் போபன்,அங்கமுத்து சண்முகம், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் ராதாரவி,மதன்பாப், தலைவாசல்விஜய், ‘வழக்கு எண்’ முத்துராமன், ரமேஷ் கண்ணா,  தயாரிப்பாளர்  ஞானவேல், இயக்குநர்கள் சுசீநதிரன், திரு, செந்தில்நாதன்,பாடலாசிரியர் இளைய கம்பன், பேச்சாளர் விழுப்புரம் செல்வராஜ், நடிகைகள் நீது சந்திரா, கோமல் சர்மா, ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

SIMILAR ARTICLES

பரபரப்பான படப்பிடிப்பில் “ ஒரு மெல்லிய கோடு “

0 8

நடன இயக்குனர் சம்பத்ராஜ் இயக்கும் “ இனி அவனே “

0 9

காவல் என்று பெயர் மாற்றப் பட்ட “நீயெல்லாம் நல்லா வருவடா”

0 8

“யோக்கியன் வாரான் செம்பதூக்கி உள்ள வை “படத்தின் பாடல் பதிவு

0 6

NO COMMENTS

Leave a Reply