ஆசிரியர்கள், பெற்றோர் கொடுத்த ஒத்துழைப்பே வெற்றியின் ரகசியம்: பவித்ரா

0 49

மார்ச் 5 ஆம்  தேதி துவங்கிய பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 31 ஆம் தேதி முடிவடைந்தன. மொத்தம் 8 லட்சத்து 86 ஆயிரத்து 27 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கையே அதிகம். இவர்கள் தவிர 42,963 பேர் தனித்தேர்வு எழுதி உள்ளனர்.

தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அரசு தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் சென்னையில் இன்று வெளியிட்டார். அப்போது மாணவிகள் 93.4 சதவீதமும், மாணவர்கள் 87.7 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

தமிழை முதன்மை பாடமாக எடுத்துப் படித்த திருப்பூர் விகாஸ் வித்யா மெட்ரிக் பள்ளி மாணவி பவித்ரா, கோவையை நிவேதா ஆகிய இருவரும் 1200க்கு 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்கள்.

திருப்பூர், கூலிபாளையம் விகாஸ் மெட்ரிக் பள்ளியில் படித்து முதலிடம் பெற்ற பவித்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆரம்பம் முதல் ஆர்வமாக படித்து வந்தேன். பழைய வினாத்தாள்களையும் படித்தேன். இரவு 7. 30 மணி வரை வகுப்புகள் நடக்கும். அதிகாலை 3.30 க்கு எழுந்து படித்தேன். ஆசிரியர்கள், பெற்றோர் கொடுத்த ஒத்துழைப்பே எனது வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஆரம்பம் முதல் ஆர்வமாகவும், அதிக நேரம் உழைத்ததால்தான் என்னால் முதல் இடம் பெற முடிந்தது என்றார்.

வரும் காலத்தில் சார்ட்டர்டு அக்கவுண்டன்சி படித்து உயர் பணிக்கு செல்ல ஆர்வமாக உள்ளேன் என்று பவித்ரா கூறியுள்ளார்.

பவித்ராவின் பெற்றோர் ஜானகிராமன் தனியார் பனியன் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

NO COMMENTS

Leave a Reply