படிக்க ஏற்ற சூழல் பற்றி அறிய சில டிப்ஸ்

0

புறாச் சத்தம், புறச் சத்தம் என்று எதுவுமே கேட்காத புறநகர் பகுதியில் அமைந்த அந்த வீட்டில் ஓசைக்கு இடமில்லை. கணவன் – மனைவிகூட சைகையில்தான் பேசிக் கொள்கிறார்கள். மயான அமைதி என்றுகூட சொல்ல முடியாது. ஏனென்றால் மயானத்தில்கூட ஏதாவது சத்தம் இருக்கலாம். அந்த வீட்டில் அதைவிட அமைதி நிலவும். காரணம் வேறொன்றுமில்லை. அந்த வீட்டில் ஒரு மாணவி பிளஸ்2 படிக்கிறாள் . அதுதான் காரணம். தேர்வு நேரங்களில் இதுபோல பல வீடுகள் ஒலிபுகாக் கூடுகளாக மாறுகின்றன.

அதே நேரம் “சார்! என் பையன் படிக்கும்போது டிவியில பாட்டு கேட்டுக்கிட்டே படிக்கிறான். இது தப்பான பழக்கம்னு எடுத்துச் சொல்லுங்க” – இதுபோல பல பெற்றோர்கள் என்னிடம் குறைபட்டுக் கொள்கின்றனர். இப்போது வரும் பாடல்களைக் கேட்கும்போது, பாட்டு கேட்பதே கெட்டபழக்கம்தான் என்று சொல்லக் கூடிய நிலைமை உள்ளது. அது வேறு விஷயம். படிக்கும்போது எந்தவிதமானப் புறத்தூண்டுதல்களும் இல்லாமல் இருக்க வேண்டுமா என்பதைக் கொஞ்சம் அலசுவோம்.

பொதுவாக, நல்ல நினைவுத் திறனுக்கு கவனம் மிக முக்கியம். ஆனால் கவனிக்கும் திறன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் வேறுபடுகிறது. மூளையின் இயக்கங்கள் எண்ணிப்பார்க்க இயலாத வகையில் பிரமிக்க வைப்பவை. ஒரே நேரத்தில் எட்டு விஷயங்களைச் சர்வ சாதாரணமாகக் கையாளும் அஷ்டாவதானிகள் தொடங்கி நூறு விஷயங்களைக் கையாளும் சதாவதானிகள் என்று நம்முன் உதாரணங்கள் ஏராளம்.

சிலருக்கு எந்தவிதப் புறத்தூண்டுதலும் இல்லையென்றால் விழிப்புணர்வு (arousablity) குறைந்துவிடுகிறது. ஓசைகளே இல்லாமல் இருந்தால் தூக்கம் வருகிறதல்லவா அது போல. இவர்களுக்குப் புறச்சத்தம் தூண்டுவதால் கவனம் இன்னும் கூர்மையடைகிறது. பின்னணியில் ஏதேனும் இசை அல்லது ஓசை இருந்தால் இவர்களால் நன்றாகப் படிக்க முடிகிறது.

அதே நேரம் விழிப்புணர்வைத் தூண்டுவது வேறு சிலருக்குக் கவனச் சிதறலை உண்டாக்குகிறது. மேலும் டிவியில் வரும் பாடல்கள் அல்லது இசை வெறும் ஓசை என்ற அளவில் இல்லாமல் அந்தப் பாடல்கள், இசை, திரைப்படம் தொடர்பான நினைவுகளைத் தூண்டிவிட்டால் சிலருக்கு நினைவுத்திறன் பாதிக்கப்படும்.
எனவே இந்த விஷயத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. அவரவருக்கு வசதியானதை அனுமதிப்பதே சரி. அதே நேரம், அளவுக்கு அதிகமான தூண்டுதல் எதிர்மறையான விளைவை உண்டாக்கும். பைக் ஓட்டிக்கொண்டேதான் படிப்பேன் என்றெல்லாம் சொன்னால் கண்டிக்கத்தானே வேண்டும்!

Share

SIMILAR ARTICLES

பிளஸ் 2 தேர்வு: இந்தாண்டும் மாணவிகளே முதலிடம்

0

பிளஸ் 2 தேர்வு திருப்பூர் மாணவி முதலிடம்

0

NO COMMENTS

Leave a Reply