குழந்தை இருப்பதாக வதந்தி: அஞ்சலி

நடிகை அஞ்சலி மாப்ள சிங்கம் படப்பிடிப்பில் இருந்து மாயமாகி விட்டதாக சமீபத்தில் செய்திகள் பரவின. அவருக்கு திருமணம் முடிந்து குழந்தை இருக்கிறது என்றும் கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து அஞ்சலி அளித்த பேட்டி வருமாறு:–

அப்பா டக்டர், மாப்ள சிங்கம் படங்களில் கடந்த ஆறு மாதமாக ஓய்வு இல்லாமல் நடித்தேன். எனது காட்சிகள் அனைத்தையும் நடித்து முடித்து விட்டேன். மாப்ள சிங்கம் படப்பிடிப்பில் இருந்து நான் காணாமல் போய்விட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. இது குறித்து அந்த படத்தின் இயக்குனரோ, தயாரிப்பாளரோ புகார் எதுவும் செய்யவில்லை. அப்படி இருக்க இது போன்ற வதந்தி ஏன் பரவியது என்று புரியவில்லை.

தற்போது தெலுங்கு படமொன்றில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். கடந்த காலங்களில் சில பிரச்சினைகளால் தமிழ் படங்களில் நடிக்காமல் இடைவெளி விட்டேன். ஆனாலும் தெலுங்கு படங்களில் அப்போது நடித்துக் கொண்டுதான் இருந்தேன். தற்போது எல்லாம் நல்ல படியாக போய்க்கொண்டு இருக்கிறது. சினிமாவில் இருப்பவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாக தெரியும்.

உண்மைகளையும் அவர்கள் அறிந்து வைத்து இருக்கிறார்கள். என்னைப் பற்றி நிறைய வதந்திகள் பரப்பப்பட்டன. அப்படி வதந்தி பரப்பியர்கள் யார் என்று எனக்கு தெரியாது. எனது கடந்த கால விஷயங்கள் பற்றி இப்போது பேச நான் விரும்பவில்லை. இப்போது அந்த பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து விட்டன. நான் தைரியமான பெண், பிரச்சினைகளை நானே சமாளித்தேன். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளேன்.

எனக்கு திருமணம் முடிந்து விட்டதாகவும் ஒரு குழந்தை இருப்பதாகவும் செய்திகள் பரப்பப்பட்டு உள்ளன. இது வதந்திதான். என் உறவினரின் குழந்தையோடு நின்று போட்டோ எடுத்து இருந்தேன். அதை வைத்து எனக்கு குழந்தை இருக்கிறது என்று புரளி கிளப்பி விட்டார்கள். எனக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. தனியாகத்தான் இருக்கிறேன். உடல் எடையை ஏற்கனவே ஒன்பது கிலோ குறைத்து இருந்தேன். இப்போது மேலும் மூன்று கிலோ குறைத்துள்ளேன். இறைவி படத்தில் என்னை ஒல்லியாக பார்க்கலாம்.

இவ்வாறு அஞ்சலி கூறினார்.

Comments

comments